கோலாலம்பூர், அக் 9 : ஆகஸ்ட் 31 முதல் அக்டோபர் 6 வரையிலான காலக்கட்டத்தில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 15.7 மில்லியன் மலேசியர்கள், ஒருமுறை வழங்கப்பட்ட அடிப்படை ரஹ்மா நன்கொடை (SARA) உதவித்தொகையை அத்தியாவசிய பொருட்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை, மொத்த 22 மில்லியன் பெறுநர்களில் 71 சதவீதம் பேர் இந்த உதவியை பயன்படுத்தியுள்ளதாக நிதி அமைச்சகம், நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் தெரிவித்துள்ளது.
“இதுவரை நடைபெற்று முடிந்த மொத்த பரிவர்த்தனைகள் RM1.34 பில்லியனை தொட்டுள்ளன.
சாரா திட்டம் மற்றும் மாதாந்திர சாரா உதவித் தொகைகள் அமலாக்கப்பட்டதையடுத்து பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வை திறம்பட கையாள, சாரா செலுத்தும் முறைமையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“2025 ஏப்ரலில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 540 பரிவர்த்தனைகள் செயலாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதே நேரத்தில் 2,700 பரிவர்த்தனைகள் வரை சீராக செயலாக்கும் திறனுடன் அமைப்பு செயல்படுகிறது,” என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“SARA RM100 ஒருமுறை நன்கொடை” திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக, கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் அவற்றை எளிதாக்க அரசால் எடுக்கப்படும் உடனடி நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, நிதி அமைச்சகம் இவ்வாறு தெரிவித்தது.
— பெர்னாமா