புத்ராஜெயா, அக் 9 - சபாவில் நடைபெறவுள்ள 17வது மாநிலத் தேர்தல் தொடர்பான முக்கிய தேதிகள் மற்றும் பிற விஷயங்கள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் அக்டோபர் 16ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
பதினாறாவது சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ கட்ஸிம் எம் யஹ்யாவிடமிருந்து நேற்று தாங்கள் பெற்றதாக தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் இட்ரஸ் தெரிவித்தார்.
சபா மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது அத்தியாயத்தின் (4)வது பிரிவின் படி சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை மெனாரா கினாபாலுவில் சபா அரசாங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் சபா மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஹாஜிஜி நூர் வெளியிட்டார்.
இஸ்தானா ஸ்ரீ கினாபாலுவில் சபா ஆளுநர் துன் மூசா அமானின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சபா மாநில சட்டமன்றத்தில் 79 இடங்கள் உள்ளன. அவற்றில் 73 இடங்கள் போட்டி நிலவுகிறது. மற்ற ஆறு இடங்களில் நியமிக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.