ஷா ஆலம், அக் 8: நீர் ஆதாரங்களின் மீது நிலவும் சார்பை குறைக்கும் நோக்கத்துடன், நீர் மறுசுழற்சி இயந்திரத்தினை (recycled water treatment system) வெளியிடும் புதிய முயற்சியை எம்பிஐ தொடங்கி வைத்துள்ளது.
“Micro WRP எனப்படும் குறுமாதிரியிலான நீர் சுத்திகரிப்பு இயந்திரம், அதன் துணை நிறுவனம் Air Lestari Sdn Bhd மூலம் தொழிற்துறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுநீரை 70 முதல் 80 விழுக்காடு வரை சுத்திகரித்து, அதனை மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என எம்பிஐ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோʼ சைபோல்யாசன் எம். யூசுப் கூறினார்.
இத்திட்டம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், நதிகளுக்குள் கலக்கும் நீர் மாசுபாட்டைக் குறைக்கும். உலகளாவிய நிலையை (SDG) அடைவதற்கும் நுட்பமாக பங்களிக்கும், இந்த புதுமையான முயற்சி, நீர் மேலாண்மைத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும் என்றார்.
இந்த இயந்திரம் தற்போது தொழில்துறை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதில் இருந்து துவங்கி, எதிர்காலத்தில் பிற பயன்பாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது சிலாங்கூர் மாநிலத்தில் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசின் திட்டமிடலுக்கு ஒத்துழைக்கும் ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இத்தகவலை கோலாலம்பூர் மாநகரக் கூட்டரங்கில் (KLCC) நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாட்டில் (SIBS) மீடியா சிலாங்கூருக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்தார்.