ஷா ஆலம், அக் 8 - சிலாங்கூர் மாநிலம் டெங்கில் பகுதியில் அமைந்துள்ள அம்பார் தெனாங் வீடமைப்பு திட்டத்தின் (PPR Ampar Tenang) கீழ் 167 குடும்பங்களுக்கு அதிகாரப்பூர்வ வீட்டு ஒப்பந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பு RM88 மில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம், இக்குடும்பங்களின் கடந்த 20 ஆண்டுகளாக எதிர்பார்ப்பு ஓர் முடிவுக்கு வந்தது.
PPR அம்பார் தெனாங் திட்டத்தில், 700 சதுர அடி பரப்பளவு கொண்ட, 404 தரை வீடுகள் அடங்கியுள்ளன. இந்த வீடுகள் மூன்று படுக்கை அறைகள் மற்றும் இரண்டு குளியலறைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீடும் RM217,000க்கும் மேற்பட்ட மதிப்புடையதாகும்.
இத்திட்டம், டெங்கிலில் அமைந்துள்ள தாமான் பெர்மாத்தா எனும் குறைந்த செலவில் கட்டப்பட்ட வீடுகளில் வசித்திருந்த மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது.
இந்த குடியிருப்புகள் தீவிரக் கட்டுமான பாதிப்புகள் காரணமாக, வசிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல என முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அம்பார் தெனாங் வீடமைப்பு திட்டம், சிலாங்கூர் மாநில அரசு மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதை நிரூபிக்கும் இன்னொரு சிறந்த திட்டமாகும் என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு பெருமையாகக் கூறினார்.
அதுமட்டுமில்லாமல், 20 ஆண்டுக்காலமாக தொடர்ந்து வந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், மக்களை பாதுகாக்கும் இது போன்ற திட்டங்கள் மிகவும் பாராட்டுக்குரியது என அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.
எனவே, மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.