சிப்பாங், அக். 8 - 'கேங் கேப்டன் பிரபா' என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக 13 பேர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் எம். ரவீந்திரன்(வயது 27), எம்.மேகநாதன் (வயது 37), எம்.தினேஷ் (வயது 20), கே.உதயராகு (வயது 29), எம்.தினேஷ் (வயது 31), எஸ்.ஜீவன்(வயது 19), ஜெ.சங்கரநாராயணன் (வயது 28), பி.ஜோசுவா (வயது 35), எம்.தேவிந்திரன் (வயது 25) எம்.நோகர்ஜு (வயது 29), எஸ்.திவாகரன் (வயது 22), எஸ்.லோகேஸ்வரன் (வயது 26), மற்றும் டி.விஜயகுமார் (வயது 36) ஆகியோர் ஆவர்.
அந்த 13 பேரும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சோஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.
நீதிபதி அகமது ஃபுவாட் ஓத்மான் முன்னிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவர்களிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
அவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் 130வி(1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
கடந்த 2023 டிசம்பர் மற்றும் 2025 செப்டம்பர் 11ஆம் தேதிக்கும் இடையில் கம்போங் சுங்கை ஜாரோம், ஜென்ஜரோம், கோல லங்காட், ஜாலான் மஹாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் கேங் கேப்டன் பிரபா உறுப்பினர்களாக இருந்ததாக அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் முகமது முஸ்தபா பி. குன்யாலம் வழக்கை நடத்திய வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பத்து பேர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். மீதமுள்ள மூவரான மேகநாதன், சங்கரநாராயணன் மற்றும் விஜய குமார் ஆகியோர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து வழக்கு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக வழக்கை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஓப்ஸ் ஜேக் ஸ்பாரோ நடவடிக்கை மூலம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பலை முறியடித்த போலீசார் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி நான்கு மாநிலங்களில் 17 நபர்களைக் கைது செய்ததாகக் கடந்த செப்டம்பர் 24 ஆம் காவல் துறை அறிவித்தது
'கேங் கேப்டன் பிரபா' கும்பல் உறுப்பினர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
8 அக்டோபர் 2025, 9:40 AM