ad

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக RM3 மில்லியன் ஒதுக்கீடு

8 அக்டோபர் 2025, 9:31 AM
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக RM3 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக் 8 - மலேசியா கல்வி அமைச்சகம் (KPM) தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 200 விடுதி பள்ளிகளில் (SBP) கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துவதற்காக RM3 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பள்ளிகளில் ஏற்படும் பகடிவதை (buli) சம்பவங்களை தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது என இந்த அறிவிப்பை துணை அமைச்சர் வோங் காஹ் வோ இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

அவரின் விளக்கத்தின் படி, இந்த கேமராக்கள் அக்டோபர் 13ஆம் தேதி முதல் பொருத்தப்படத் தொடங்கும். அவை பொருத்தப்படும் இடங்கள், மலேசிய அரசின் தலைமை பாதுகாப்பு அலுவலகம் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, விடுதிகளில் கல்வி அமைச்சகம் திடீர் பயணங்களை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய பயணங்கள் இரவு நேரத்திலும் நடைபெறும் என்றும், அவற்றில் அமைச்சின் உயர் நிர்வாகிகள், மாநில கல்வித் துறை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலக (PPD) அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இது, பள்ளி நிர்வாகங்கள் மீது மேலாண்மை கவனத்தை அதிகரித்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான சூழல் வழங்கும் நடவடிக்கையாகும்.

பகடிவதை தடுக்கும் நோக்கத்தில், கல்வி அமைச்சகம் மனநல விழிப்புணர்வை மேம்படுத்தும் ‘Saringan Minda Sihat’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனுடன், மாணவர் வழிகாட்டிகள் (Pembimbing Rakan Sebaya), மற்றும் மாணவர் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, சமவயதினர் வழிகாட்டல் மற்றும் ஒழுக்கம் அற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

மேலும், பகடிவதை சம்பவங்களை எளிதில் புகாரளிக்கக் கூடிய புதிய இணையதள அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் புகார் அளிப்போர் அடையாளம் தெரியாமல் புகார் செய்யும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புகார்களை சரியாக கையாளத் தவறும் ஆசிரியர்கள், நிர்வாகிகள், அல்லது PPD அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தவறு செய்த மாணவர்களுக்கு ‘Bangkit Bermaruah’ திட்டத்தின் கீழ் மறுசீரமைப்புக்கான இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படும் எனவும் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.