கோலாலம்பூர், அக். 8 - இன்று காலை காஸா நோக்கிச் சென்று கொண்டிருந்த மனிதாபிமான உதவிக் கப்பல்களை இடைமறித்த இஸ்ரேலிய சியோனிசப் படைகளின் சினமூட்டும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மலேசியர்களை உள்ளடக்கிய ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணி மற்றும் காசாவிற்குச் செல்லும் தவுஸன்ஸ் மேட்லீன்ஸ் உள்ளிட்ட உதவிக் கப்பல்கள் மலேசிய நேரப்படி காலை 10.50 மணிக்கு இஸ்ரேலியப் படைகளால் அனைத்துலகக் கடல்பகுதியில் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்களைத் தடுத்து நிறுத்திய இஸ்ரேலின் செயல் மனிதாபிமானமற்றது என்பதோடு மனித உரிமைகள், உலகளாவிய மனித நெறிகளை மற்றும் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகும் என அவர் சொன்னார்.
அனைத்து மலேசிய இயக்கவாதிகள் மற்றும் தன்னார்வலர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள காலத்தில் எந்தவிதமான தீங்கும் ஏற்படக்கூடாது என்று நான் கோருகிறேன்.
இந்த மனிதாபிமான பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மலேசியர்களின் உயிரையும் பாதுகாக்க மடாணி அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
மேலும், அவர்களின் உடனடி விடுதலையை எளிதாக்க
சக நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் என்று அன்வார் கூறினார்.
இன்று அதிகாலை ஒன்பது மலேசியர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களை ஏற்றிச் சென்ற ஒன்பது கப்பல்கள் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டதை மனிதாபிமான மலேசிய பரிவு அமைப்பு (மைகேர்) உறுதிப்படுத்தியது.