ஷா ஆலம், அக் 8 - தற்போது மலேசிய இந்தியர் சமூகத்தினரிடையே பல புதிய தவறான கலாச்சாரங்கள் எழுந்துள்ளன. அவற்றில் இறுதிச் சடங்குகளில் இடம்பெறும் மது அருந்துதல், சூதாட்டம், பட்டாசு வெடித்தல், அனுமதியற்ற ஊர்வலங்கள், அதிகச் சத்தமுள்ள இசை மற்றும் சட்டவிரோதச் செயல்கள் ஆகியவையும் அடங்கும்.
சமீபத்தில் இந்த கலாச்சார சீர்கேடுகளுக்கு மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து சங்கத்தின் இந்த செயலை பாராட்டி மனித வளம் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு மீடியா சிலாங்கூருக்கு பேட்டி அளித்திருந்தார்.
உலகத்திற்கே நாகரிகம் சொல்லி கொடுத்த இந்திய சமுதாயம் தற்போது இது போன்ற நாகரிகம் அற்ற செயல்களில் ஈடுப்படுவது மிகவும் வருத்ததற்குரியது என்றார். இது போன்ற செயல்களால் எதிர்கால சந்ததினருக்கு தவறான முன்னோடியாக இருக்கிறோம் என விளக்கினார். அதுமட்டுமில்லாமல், இந்நாட்டில் பிற இனத்தவரின் இறுதிச் சடங்குகள் முறையாக நடைபெறுகிறது என்றார்.
இதுபோன்ற நாகரிகம் அற்ற செயல்கள் நடப்பதற்கு முதன்மை காரணமாக இருப்பது பெற்றோர்களே என அவர் சாடினார். பெற்றோர்கள் தங்களின் வள்ர்ப்பில் கூடுதல் அக்கறை எடுத்து பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்க வேண்டும், இல்லையேனில் அவர்கள் ஒழுங்கற்ற செயல்களில் ஈடுப்பட்டு தங்களின் வாழ்க்கையை அழித்து கொள்ள நேரிடும் என எச்சரித்தார்.
இளைஞர்கள் தவறான பாதைகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் மற்றும் அரசு சாரா அமைப்புகளை குறை கூற முடியாது. பிள்ளைகளை நல்ல முறையில் சிறந்த பண்புகள் மற்றும் சரியான பண்பாட்டுடன் வளர்ப்பது பெற்றோரின் கடமையே ஆகும் என பாப்பாராய்டு ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
இறுதியாக, இது போன்ற தவறான செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து தங்கள் பணிகளை சரியான முறையில் ஆற்றி வரும் இந்து சங்கத்திற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.