கோலாலம்பூர், அக் 8 - உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச்செலவுத் துறை அமைச்சகம் (KPDN) செயல்படுத்தும் BUDI MADANI RON95 (BUDI95) மானிய திட்டத்தின் அமலாக்கம் தற்போது எந்தவொரு குறைபாடுமின்றி முழுமையாக மற்றும் சீராக செய்யப்பட்டு வருகிறது என அத் துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் பௌஸியா சாலே உறுதிப்படுத்தியுள்ளார்.
BUDI95 திட்டம் கடந்த மாத இறுதியில் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 34 புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் எரிபொருள் நிலையங்களில் ஏற்பட்ட தற்காலிக தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது அமைப்பு செயலிழப்புகளுக்குரியன எனத் தெரிவிக்கப்பட்டது.
“பயனாளர்களிடமிருந்து வந்த 34 புகார்களும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களே. எனினும், எரிபொருள் நிலையங்கள் குறைந்த விலை மானியத்தின் விலைவித்தியாசத்தைப் பயனாளர்களுக்கு திருப்பிச் செலுத்தியுள்ளன,” என்று துணை அமைச்சர் தெரிவித்தார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் தம்பின் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் டத்தோ முகமட் இஷாம் முகமட் இசா அவர்களால் முன்வைக்கப்பட்ட கூடுதல் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, KPDN அமைச்சகம் இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தையும், நடைமுறை செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து, பயனாளர்களின் மானிய நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் வலியுறுத்தினார்.
“எரிபொருள் நிலையங்களும், தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களும் ஏற்படும் எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறுகளையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதில் அமைச்சகம் உறுதியாக உள்ளது. இத்திட்டம் அனைத்து இடங்களிலும் இணக்கமாக செயல்படுவதை உறுதிப்படுத்துவது எங்களது பிரதான கவனம் ஆகும்,” என அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2025 செப்டம்பர் 30ஆம் தேதி முதல் BUDI95 திட்டத்தின் முழுமையான செயல்பாடு ஆரம்பிக்கப்பட்டதை அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின் கீழ், மலேசியா குடிமக்கள் RON95 பெட்ரோலை RM1.99 என்ற மானிய விலையில் பெற முடிகிறது. இது முன்னர் இருந்த RM2.05 விலையிலிருந்து குறைவானது.
மேலும், இந்தத் திட்டம் வழியாக, ஒவ்வொரு மலேசிய குடிமகனும் மாதத்திற்கு அதிகபட்சம் 300 லிட்டர் வரை மானிய பெட்ரோல் பெற தகுதியுடையவர்களாக உள்ளனர்.
இதனிடையே, மலேசியா குடிமக்களல்லாதவர்கள், RON95 பெட்ரோலுக்கு RM2.60 என்ற விலையை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.