ஷா ஆலம், அக். 8 - பந்திங், சுங்கை சீடு தொழிற்பேட்டையில் செயல்படும் ஒரு பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்று 2014ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தர ( காற்றுத் தூய்மை ) விதிமுறைகளை மீறியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் 30,000 வெள்ளி அபராதம் விதித்தது.
காற்றை மாசுபடுத்துவதாக சந்தேகிக்கப்படும் வளாக நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் வாண்டி யாஷிட் யாக்கோப் தெரிவித்தார்.
அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் எக்ஸ்ட்ரூஷன் இயந்திரத்தைப் பயன்படுத்தி அதிக அளவு பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வது கண்டறியப்பட்டதோடு அந்த இடத்தில் பிளாஸ்டிக் பொருட்களும் குவிந்து கிடக்கக் காணப்பட்டன.
காற்று மாசு கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்பட்ட சேதம் குறித்து தலைமை சுற்றுச்சூழல் தர இயக்குநருக்கு தெரிவிக்க அந்நிறுவனம் தவறிவிட்டது. செயல்பாட்டு அமைப்பை கட்டுப்படுத்த ஒரு அதிகாரப்பூர்வ நபரையும் அது நியமிக்கவில்லை. மேலும், அமைப்பின் செயல்திறனைத் தேவைக்கேற்ப ஒழுங்கமைத்து பதிவு செய்யத் தவறிவிட்டது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட நிறுவனத்தின் இயக்குநருக்கு நீதிபதி அகமது ஃபுவாட் ஓத்மான் அபராதம் விதித்தார். விதிமுறைகளின்படி ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக 100,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இதற்கிடையில், அனைத்து தொழில்துறை வளாகங்களும் 1974ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டம் மற்றும் அதன் கீழ் உள்ள விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்ய சிலாங்கூர் சுற்றுச் சூழல் துறை கண்காணிப்பைத் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று வாண்டி யாட்ஜிட் வலியுறுத்தினார்.
காற்றுத் தூய்மை விதிமீறல் - பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு வெ.30,000 அபராதம்
8 அக்டோபர் 2025, 7:38 AM