ஈப்போ, அக். 8 - வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 375வது கிலோ மீட்டரில் தெற்கு நோக்கிய தடத்தில் சிலிம் ரிவர் அருகே கடந்த திங்கட்கிழமை ஒரு பல்நோக்கு வாகனத்தை (எம்.பி.வி.) சோதனை செய்த போலீசார் அதிலிருந்து 1 கோடியே 29 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த நெடுஞ்சாலை ரோந்துக் குழு அந்த எம்.பி.வி. வாகனத்தை நிறுத்த உத்தரவிட்டதாகவும் ஆனால், ஓட்டுநர் ஒத்துழைக்க மறுத்து தப்பி ஓட முயன்றதாகவும் பேராக் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
சந்தேக நபர்களின் அந்த வாகனத்தை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற போலீசார், அதனை வெற்றிகரமாக நிறுத்தினர். எனினும், வாகனத்திலிருந்த இரண்டு நபர்களும் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி சென்றுவிட்டனர் என அவர் கூறினார்.
இரண்டு சந்தேக நபர்களையும் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் இன்று பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
வாகனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 374 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் அடங்கிய 15 சாக்குப்பைகளும், 11.28 கிலோ எடையுள்ள ஹெராயின் என நம்பப்படும் போதைப்பொருட்கள் அடங்கிய கருப்பு பிளாஸ்டிக் பொட்டலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக நூர் ஹிசாம் கூறினார். இதன் மொத்த மதிப்பு சுமார் 1 கோடியே 29 லட்சம் வெள்ளியாகும்.
பேராக் மாநிலத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவில் மிகப்பெரியது. கிள்ளான் பள்ளத்தாக்கு சந்தையில் விநியோகிக்கப்படவிருந்த இந்த போதைப் பொருளை 37 லட்சத்திற்கும் அதிகமான போதைப்பித்தர்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், கைப்பற்றப்பட்ட வாகனம் ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டதாகக் கூறினார்.
வெ.1.29 கோடி போதைப்பொருள் பறிமுதல் - இரு சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
8 அக்டோபர் 2025, 6:41 AM