ஷா ஆலம், அக் 8 - எதிர்வரும் அக்டோபர் 20ஆம் திகதி கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் அலுவலக இந்திய தூய்மை பணியாளர்களுக்கு உணவு கூடை மற்றும் பணம் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் 25 பணியாளர்கள் மிகவும் மகிழ்வுடன் இந்த உதவிகளை பெற்று கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உணவு கூடைகளை, மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு பணியாளர்களுக்கு எடுத்து வழங்கினார்.
இது மாநில அரசின் முற்சியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான திட்டமாகும் என உதவி பெற்ற பணியாளர்கள் கருதினர். இதுபோன்ற உதவிகள் தங்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்ததோடு இது போன்ற திட்டங்கள் மேலும் தொடரும் என எதிர்பார்ப்பதாகக் கூறினர்.
அதுமட்டுமில்லாமல், தங்கள் மீது உள்ள அக்கறையால் இந்த உணவு கூடைகளை வழங்கிய வீ.பாப்பாராய்டு மற்றும் அவரின் குழுவினருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.