மலாக்கா, அக். 8- நான்கு சக்கர இயக்க வாகனம் ஒன்றின் பின்புறத்தில் 'மலேசியா எங்கள் வீடு' அல்லது 'மலேசியா எங்கள் கைகளில்' என ஹிப்ரு மொழியில் எழுதப்பட்ட வாசகம் காணப்பட்டது தொடர்பில் போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக ஊடகமான 'த்ரெட்' செயலியில் இந்த வாசகம் தொடர்பான காணொளியைக் கண்ட மலாக்கா முதலமைச்சரின் சிறப்பு சமய அதிகாரி ஒருவர் மாலை 3.32 மணிக்கு அளித்த காவல்துறை புகாரைத் தொடர்ந்து நேற்று இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக மலாக்கா மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஜூல்கைரி முக்தார் தெரிவித்தார்.
நேற்றிரவு சமூக ஊடகங்களில் வைரலான 14 வினாடிகள் கொண்ட காணொளியில் காணப்பட்ட அந்த ஸ்டிக்கரின் அர்த்தம், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் கோபம் உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைகளை ஆற்றத் தூண்டியதாக அவர் கூறினார்.
இதன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இஸூசு நான்கு சக்கர இயக்க வாகனம் நெகிரி செம்பிலான், கெமெஞ்சேவை முகவரியாகக் கொண்ட நபர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
பொதுமக்களுக்கு பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 504(பி) பிரிவு மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் அல்லது சேவைகளை நியாயமற்ற முறையில் பயன்படுத்தியதற்காக 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்றைய அறிக்கையில் தெரிவித்தார்.
சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் எப்போதும் பாதுகாக்கப்படுவதை செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக காவல்துறை வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
இந்த காணொளியின் வைரல் தொடர்பாக பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் உருவாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நான்கு சக்கர இயக்க வாகனத்தில் ஹிப்ரு மொழியில் வாசகம்- போலீஸ் விசாரணை
8 அக்டோபர் 2025, 2:53 AM