புத்ரஜெயா, அக். 8- மின்சார வாகனங்கள் (இ.வி.) சம்பந்தப்பட்ட தீ விபத்துகளைக் கையாள்வதில் தயார் நிலையை வலுப்படுத்துவதற்காக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சிறப்புப் பயிற்சி மற்றும் திறன் படிப்புகளைப் பெற்றுள்ளனர்.
பயிற்சி பெற்ற அந்த அதிகாரிகள் முக்கிய பயிற்றுநர்களாகச் செயல்படும் வேளையில் மின்சார வாகனங்கள் சம்பந்தப்பட்ட தீ விபத்துகளைக் கையாள்வது தொடர்பான வழிமுறைகளை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்படுவார்கள் என்று அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.
மின்சார வாகனங்களில் ஏற்படும் தீயை எவ்வாறு முறையாகவும் திறம்படவும் அணைப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்டுள்ளது. சார்ஜிங் இடங்கள் அல்லது திறந்த வெளிகளில் ஏற்படும் சம்பவங்களும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
தனியார் துறை மற்றும் மின்சார வாகன உற்பத்தியாள- ர்களின் நன்கொடைகள் மூலம் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு போர்வை போன்ற சிறப்பு உபகரணங்களை தீயணைப்புத்துறை வழங்கியுள்ளது என்று அவர் நேற்று அத் துறை தலைமையகத்திற்கு மலாக்கா ஆளுநர் துன் டாக்டர் முகமட் அலி முகமட் ருஸ்தாம் மேற்கொண்ட பணிநிமித்த வருகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
தரமற்ற மாற்று பேட்டரிகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்பதால் ஆயுட்காலம் முடிவடைந்த மின்சார வாகன பேட்டரிகளை அப்புறப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அனைத்துலக பங்காளிகளுடன் இணைந்து தீயணைப்புத் துறை உருவாக்கி வருவதாக நோர் ஹிஷாம் கூறினார்.
கடந்த 2023 முதல் கடந்த ஜூலை வரை மின்சார வாகனம் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 27 தீ விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணை அமைச்சர் டத்தோ ஐமான் அதிரா சாபு முன்னதாக கூறியிருந்தார்.
மின்சாரக் கார்கள் சம்பந்தப்பட்ட தீவிபத்துகளைக் கையாள 100 அதிகாரிகளுக்கு தீயணைப்புத் துறை பயிற்சி
8 அக்டோபர் 2025, 2:38 AM