ஷா ஆலாம்: அக் 7 சிலாங்கூர் மாநில அரசு சார்பில் இ-காசே, செஜாத்தி மடாணி திட்டங்கள் தொடர்பாக விளக்கவுரைகளும் இ-காசே உதவிக்கான விண்ணப்பங்களும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் யாவும் சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தின் ஃபோயரில் நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு யாவும் முறையாக செஜாத்தி மடாணி மூலமாக தகுதி பெற்ற சமூக அமைப்புகள், அரசு சாரா இயக்கங்களுக்குச் சென்று சேர்வதை மாநில அரசு உறுதி செய்யும். இதனால் இந்திய சமூக மக்கள் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளின் மூலம் தங்களும் சமூக வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்ய முடியும் என்று சிலாங்கூர் மாநில மனித வளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு கூறினார்.
இருப்பினும், செஜாத்தி மடாணி திட்டம் தொடர்பான விண்ணப்பங்களில் ஏதேனும் இடர்கள் இருந்தாலும் மாற்று வழிகளில் அவர்களுக்கு முறையாக உதவிகளை வழங்க மாநில அரசாங்கம் முனைப்பு காட்டுவதாக அவர் சொன்னார்.
இந்திய சமூக மக்கள் குறிப்பாக, தோட்டப்புறத்தில் இருப்பவர்கள் வழங்கப்படும் இந்த நிதியைக் கொண்டு வாழ்வில் பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்ப் பார்ப்பாகும் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் விவரித்தார்.
அடுத்ததாக, இ-காசே திட்டத்தின் மூலமாக மக்களுக்கான அடிப்படை உதவிகள் கிடைப்பதில் அரசு செயல்பட முடியும். சிலாங்கூரில் ஏழ்மை நிலையிலும் மக்கள் இருக்கின்றனர். இ-காசே மூலம் விண்ணப்பம் செய்தால் தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு முறையாக உதவிகள் வழங்கப்படும்.
இ-காசே திட்டத்தில் இந்தியர்களைப் பதிவு செய்ய வைப்பதில் இந்திய சமூக தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். இதனால் அதிகப்படியான இந்திய மக்களின் தரவுகள் பெறப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில அரசும் பிரதமர் துறைக்கான ICUவும் இணைந்து இந்த இ-காசே பதிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.