ஷா ஆலம், அக் 7: BUDI MADANI RON95 (BUDI95) என்ற இலக்கு மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்த முதல் வாரத்திலேயே நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்துவதாகவும், இது மக்களுக்கு நேரடியாக நன்மை தருவதாகவும் கூறப்படுகிறது.
“BUDI95 மூலம் மக்கள் RON95 எரிபொருளை குறைந்த விலையில் பெற முடிகிறது. இதே நேரத்தில், இந்த நடவடிக்கை அரசுக்கு மானிய வீணாகாமல் இருப்பதற்கு உதவுகிறது என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மேலும், தேசிய அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய தகவல்களை புதுப்பிக்கவும் இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கிறது,” என X தளத்தில் பதிவிட்டார்.
இந்த திட்டம் தொடர்பான அறிக்கை, அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற மந்திரி புசார் மற்றும் தலைமை அமைச்சர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், திட்டம் மக்களுக்கும் அரசுக்கும் நேரடி நன்மைகள் வழங்குவதாக கூறப்பட்டது. இது, திட்டத்தின் ஆரம்பநிலைக்கே நேர்ந்த முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
BUDI95 திட்டம் உருவாக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், அரசின் நிதி உதவிகள் தகுதியுள்ள மக்களுக்கு நேரடியாகச் செல்வதை உறுதி செய்வதுடன், நாட்டின் நிதிச்செலவுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும் ஆகும்.
தற்போது, 16 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் RON95 எரிபொருளை மானிய விலையில், அதாவது RM1.99க்கு ஒரு லிட்டர் என பெற்றுவருகின்றனர்.
மானியம் இல்லாமல் இந்த விலை RM2.60 ஆக இருக்கும் என்பதால், மக்கள் வாழ்க்கைச் செலவில் இந்தத் திட்டம் மறுக்கமுடியாத நன்மை தருவதாக கூறப்படுகிறது.


