சுங்கை பூலோ, அக். 7 - சுங்கை பூலோ பி பகுதியில் உள்ள 12 சட்டவிரோத தொழிற்சாலைகளை இடிக்கும் சிலாங்கூர் அரசின் நடவடிக்கையானது அனுமதி பெறாத தொழிற்சாலை நடவடிக்கைகளில் இனி
ஒருபோதும் சமரசம் செய்யப்படாது என்பதற்கான தெளிவான சான்றாகும்.
நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலான வளாகங்கள் ஆற்று ரிசர்வ் நிலத்திலும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிலத்திலும் தளவாடங்கள், உற்பத்தி நடவடிக்கைகள், விளம்பரப் பலகைகள், கடைகள் மற்றும் கிடங்கு உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
அரசாங்க ரிசர்வ் நிலத்தை நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத தொழிற்சாலைகளை எதிர்ப்பதில் மாநில அரசின் தீவிர நிலைப்பாட்டை நாங்கள் காட்ட விரும்புகிறோம். கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்ட கடைசி நினைவூட்டல் அறிவிப்பு உட்பட, அனைத்து தொழிற்சாலை நடத்துநர்களுக்கும் காலி செய்ய போதுமான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இன்னும் வெளியேற மறுக்கிறார்கள் என்று அவர் இன்று அமலாக்க நடவடிக்கை பகுதியில் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்ட இந்த வளாகங்களுக்கு மாநில அரசு மூன்று முதல் நான்கு முறை எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டதோடு தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்குவதற்கும் வாய்ப்பு வழங்கியது, ஆனால் அதன் முடிவுகள் ஊக்கமளிக்கும் வகையில் இல்லை என்று அவர் விளக்கினார்.
சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
என அவர் குறிப்பிட்டார்.
தொழில்முனைவோருக்கு அத்தகைய வளாகங்களை மாதம் வெ.7,000 முதல் வெ.12,000 வரை
வாடகைக்கு விடும் 'இடைத்தரகர்கள்' இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதன்வழி மொத்த வசூல் மாதத்திற்கு கிட்டத்தட்ட 100,000 வெள்ளியாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலை நடத்துபவர்களும் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு தங்கள் செயல்பாடுகளை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய உடனடியாக நில அலுவலகம் அல்லது அந்தந்த ஊராட்சி மற்றங்களின் உதவியை நாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சுங்கை பூலோவில் 12 சட்டவிரோத தொழிற்சாலைகள் இடிப்பு
7 அக்டோபர் 2025, 10:16 AM



