ஷா ஆலம், அக். 7 - இங்குள்ள செக்சன் 32, கெமுனிங் உத்தாமா, (முன்னாள் எமரால்ட் தோட்டம்) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு மடாணி அரசின் சார்பில் மானியம் வழங்கப்பட்டது.
அண்மையில் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் கோத்தா ராஜா தொகுதி தலைவர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இந்த மானியத்தை ஆலயப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.
நீண்டகாலமாக முழுமை பெறாமலிருக்கும் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்து கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு உதவும் நோக்கில் இந்த மானியம் வழங்கப்பட்டது.
உள்ளூர் சமூகத்தின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டி வரும் மடாணி அரசுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் தெரிவித்தார்.
மக்களிடையே நல்லிணக்கத்தை ஆதரிப்பதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் உரிய கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த மானிய விண்ணப்பத்தை ஒருங்கிணைப்பதில் உதவிய டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அவர்களுக்கும் விண்ணப்பத்தை அங்கீகரித்த நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் காமில் மூனிம் அவர்களுக்கும் தாம் நன்றி
தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமரின் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு பிரிவு அதிகாரி எஸ். ஜஸ்டின் ராஜ் கூறினார்.
அதே வேளையில் வழிபாட்டுத் தலங்களை நிலையான சமூக மேம்பாடு மற்றும் பகிரப்பட்ட நிலைத்தன்மைக்கான சமூக மையங்களாக மாற்றுவதற்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னெடுப்பு பெரிதும் பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆலயத்தை நான் நீண்ட காலமாக அறிவேன். இதன் கட்டுமானம் நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது. மடாணி அரசின் இந்த உதவி ஆலய நிர்வாகத்தின் சுமையை ஓரளவு குறைத்து கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தும் என்று நம்புகிறேன் கெஅடிலான் கட்சியின் கோத்தா ராஜா தொகுதி உதவித் தலைவருமான அவர் கூறினார்.





