ஷா ஆலம், அக். 7 - மிகவும் வறிய நிலையிலுள்ள பலர் இ-காசே திட்டத்தில் இன்னும் பதிவு செய்யாமலிருப்பதைக் கருத்தில் கொண்டு மாநில அரசு அத்திட்டத்திற்கான பதிவு இயக்கத்தை இன்று தொடங்கி தீவிரப்படுத்துகிறது.
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நிலவரப்படி சிலாங்கூரில் 14,931 ஏழை குடும்பத் தலைவர்கள் உள்ள வேளையில் அவர்களில் 753 குடும்பத் தலைவர்கள் மட்டும் இ- காசே திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
டிசம்பர் மாதத்திற்குள் இ-காசே திட்டத்திற்கான பதிவை அதிகரிப்பதை நான் இலக்காகக் கொண்டுள்ளேன். பதிவு செய்வதில் உதவுவதற்காக நாங்கள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் சாத்தியம் உள்ளது என அவர் சொன்னார்.
இத்த அதிகரிப்பு இன்னும் 10 முதல் 20 சதவீதம் வரை இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் கவனம் செலுத்துவோம். ஏனென்றால், நகரிலும் ஏழைகள் இருந்தாலும் கிராமங்களுடன் ஒப்பிடும்போது அங்கு பல வழிகள் உள்ளன என்று அவர் கூறினார்.
இன்று மாநில அரசு தலைமைச் செயலக கட்டிடத்தில் செஜாத்தி மடாணி தொடக்க விழா மற்றும் 2025 இ-காசே பதிவு ஆகிய நிகழ்வுகளைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், செஜாத்தி மடாணி திட்டத்தின் வழி மானியங்களைப் பெற விண்ணப்பிக்குமாறு சமூகங்கள் அல்லது சங்க அமைப்புகளுக்கு பாப்பாராய்டு அழைப்பு விடுத்தார்.
இந்த திட்டத்திற்கு இன்னும் கூடுதலாக 1.1 கோடி வெள்ளி பயன்படுத்தப்படாமல் உள்ளது. சிலாங்கூரில் தற்போது 257 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 2 கோடியே 7 லட்சம் வெள்ளியாகும் என அவர் குறிப்பிட்டார்.