புத்ராஜெயா, அக் 7: இலக்கு மானிய திட்டமான BUDI MADANI RON95 (BUDI95) திட்டத்தின் தகுதியை மேலும் மூன்று குழுக்குகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கை இந்த திட்டத்தில் 31,000க்கும் மேற்பட்ட மக்களை சேர்த்துள்ளது.
இந்த தகுதி விரிவாக்கம் மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 17,900க்கும் மேற்பட்ட மீனவர்கள், சபா துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை ஆணையத்தில் பதிவு பெற்ற 4,300க்கும் மேற்பட்ட தனியார் படகு உரிமையாளர்கள் மற்றும் சாலை போக்குவரத்து துறையால் பதிவு செய்யப்பட்ட 9,700 புதிய ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களை உள்ளடக்கியதாகக் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் மொத்தம் 16 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுடன் இணைந்து மானியமளிக்கப்படும் RON95 எரிபொருளை RM1.99 என்ற விலையில் பெற முடியும்.
மேலும், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஓட்டுநர் உரிமம் இல்லாத படகுப் பயனாளர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை உறுதிப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், முழுநேர e-hailing ஓட்டுநர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க, தற்போது வழங்கப்படும் மாதத்திற்கு 300 லிட்டர் மானிய வரம்பை அதிகரிக்க, போக்குவரத்து முகமை (APAD) மற்றும் e-hailing நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இது, மானிய திட்டத்தால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மடாணி அரசு இந்த திட்டத்தை நேர்மையான, எளிமையான மற்றும் மக்களுக்கு நேரடியாகப் பயன் அளிக்கும் முறையில் செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள், BUDI MADANI திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பகுதியை பார்க்கலாம் அல்லது 1-300-88-9595 என்ற உதவி அழைப்பு எண்ணையோ, +603-2631 4595 வாட்ஸாப் எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.