ஷா ஆலம், அக். 7 - சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான தீபாவளி பொது உபசரிப்பு இம்மாதம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிள்ளான், லிட்டில் இந்திய செட்டி பாடாங்கில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இரவு 7.00 மணி தொடங்கி நள்ளிரவு வரை நீடிக்கும் இந்த உபசரிப்பில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்கு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
பெருநாள் விற்பனைக்கு பிரசித்தி பெற்ற வர்த்தக மையமான கிள்ளான், லிட்டில் இந்தியாவில் வார இறுதி நாட்களில் அதிகமாக மக்கள் கூடும் காரணத்தால் இந்த நிகழ்வை வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் சொன்னார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு பொது உபசரிப்பில் விருந்து உபசரிப்பு, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அங்கங்களோடு ஆலயங்களுக்கு மானியம் வழங்குவது மற்றும் ஐ.சீட் விண்ணப்பதாரர்களுக்கு வர்த்தக உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம் பெறும் என அவர் தெரிவித்தார்.
இந்த பொது உபசரிப்பில் மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்களுக்கான இரண்டாம் கட்ட மானியம் வழங்கும் நிகழ்வு நடைபெறும் எனக் கூறிய 150க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு சுமார் 10 லட்சம் வெள்ளி பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.
முதல் கட்ட மானியம் இவ்வாண்டு தைப்பூசத்தின் போது ஆலயங்களிடம் வழங்கப்பட்டது. இது இவ்வாண்டிற்கான இறுதிக்கட்ட நிதியளிப்பு நிகழ்வாகவும் விளங்குகிறது என்றார் அவர்.
இன்று இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இ-காசே மற்றும் மடாணி செஜாத்தி திட்டங்களின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் சுமார் 10,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம். திறந்த வெளி நிகழ்வாக விளங்குவதால் மக்கள் வந்து சென்ற வண்ணம் இருப்பர் என அவர் சொன்னார்.