ad

தீபாவளியின் போது அந்நிய வியாபாரிகளுக்கு தடை- பாப்பாராய்டு வலியுறுத்து

7 அக்டோபர் 2025, 7:26 AM
தீபாவளியின் போது அந்நிய வியாபாரிகளுக்கு தடை- பாப்பாராய்டு  வலியுறுத்து

ஷா ஆலம், அக். 7 - தீபாவளி பண்டிகையின் போது சிலாங்கூர் மாநிலத்தில் அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வலியுறுத்தியுள்ளார்.

அந்நிய வியாபாரிகளால் உள்நாட்டினரின் வர்த்தகம் பாதிக்கப்படுவது தொடர்பில் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்திடமிருந்து தாம் புகாரைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

உள்நாட்டு வர்த்தகர்களைப் பொறுத்த வரை தீபாவளிதான் வருமானம் ஈட்டுவதற்குரிய தருணமாக விளங்குகிறது. இக்காலக்கட்டத்தில் கார்னிவல் என்ற பெயரில் அந்நிய நாட்டினர் வியாபாரத்தில் ஈடுபடுவது உள்நாட்டினரின் வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இ-காசே பதிவு மற்றும் செஜாத்தி மடாணி திட்ட தொடக்க நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெருநாள் காலத்தில் உள்நாட்டினரின் வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக அந்நியர்களின் வர்த்தக நடவடிக்கைளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) ஆகிய ஊராட்சி மன்றங்களுக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக அவர் சொன்னார்.

பெருநாள் காலத்தில் குறிப்பாக தீபாவளியின் பொது அந்நிய நாட்டினர் சம்பந்தப்பட்டுள்ள பெரிய அளவிலான விற்பனை விழாக்களை நடத்தக் கூடாது என வர்த்தக சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது.

அந்நிய நாட்டினர் பஞ்சாபி உடைகள், கம்பளம் போன்ற பொருள்களை கொண்டு வந்து விற்று எளிதாக லாபம் ஈட்டிச் சென்று விடுகின்றனர்.

ஆனால், இதில் பாதிக்கப்படுவது உள்நாட்டினர்தான். அவர்கள் கடைகளைத் திறந்து, முறையாக லைசென்ஸ் பெற்று, மதிப்பீட்டு வரி செலுத்தி, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி, வருமான வரியும் செலுத்துகின்றனர்

அவர்களின் நலன் காக்கப்படுவது மிக முக்கியம் என அவர் சொன்னார். பெருநாளின் போது ஒரு மாதக் காலத்திற்கு எந்தவொரு விற்பனை விழாவும் நடத்தக்கூடாது என ஊராட்சி மன்றங்களிடம் நான் வலியுறுத்தியுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம் உள்நாட்டு வணிகர்களை இலக்காக கொண்டு ஊராட்சி மன்றங்களால் ஏற்பாடு செய்யப்படும் தீபாவளி சந்தை போன்ற நிகழ்வுகளுக்கு வர்த்தக சங்கத்தினர் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்பதையும் பாப்பாராய்டு தெளிவுபடுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.