ஷா ஆலம், அக் 7: சிலாங்கூர் மாநில மக்கள், நான்கு வகையான மறுசுழற்சி பொருட்கள் மற்றும் பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆகியவற்றை பணமாக மாற்றிக்கொள்ள "5இன்-1" தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்தலாம். இதன் மூலம், நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற முடியும்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த இயந்திரம், மாநிலத்தில் முதன்முறையாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் KDEB Waste Management Sdn Bhd (KDEBWM) நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பொதுமக்களுக்கு, காகிதம், பெட்டிகள், பிளாஸ்டிக், அலுமினியக் கேன்கள் மற்றும் பயன்படுத்திய சமையல் எண்ணெய் போன்ற பொருட்களை, நேரடியாக பணமாக மாற்றும் வசதியை வழங்குகிறது. இந்த பணம், வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.
HMA Digital Malaysia நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம், மறுசுழற்சி நடவடிக்கையை எளிதாகவும், பயனளிக்கக் கூடியதாகவும் மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று KDEBWM நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் கூறினார்.
"பொதுமக்கள், இந்த இயந்திரத்தை சாதாரண தானியங்கி இயந்திரங்களைப் போலவே, 24 மணி நேரமும், 365 நாட்களும் பயன்படுத்தலாம். முதலில், பயனர்கள் தங்கள் தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட வேண்டும்.
அதன் பின்னர் சில நாட்களுக்குள், பணம் வங்கிக் கணக்கில் மாற்றம் செய்யப்படும்," என ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, இந்த இயந்திரம் நுண்ணறிவு சென்சார்கள் மூலம், எண்ணெயில் தண்ணீர் கலத்தல் அல்லது பாட்டிலில் கல் வைத்து ஏமாற்றும் நடவடிக்கைகளை கண்டறியும் திறனைக் கொண்டுள்ளது.
மேலும், இது சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராவைக் கொண்டுள்ளதோடு, பயனர்கள் இயந்திரம் பயன்படுத்தும் போதே ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அவர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு உதவவும் முடியும்.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, சிலாங்கூர் முழுவதும் 100 இயந்திரங்களை நிறுவுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில், அரசுத் துறை அலுவலகங்கள், பசார் ராயா, சமூக மண்டபங்கள், வழிபாட்டு தளங்கள் மற்றும் பொது இடங்களில் நிறுவுவது முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.