கோலாலம்பூர், அக் 7 - எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கல்வி அமைச்சு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் கூடுதல் விடுமுறையை அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
2025/2026 கல்விக் ஆண்டுக் கால அட்டவணையின் படி, கெடா, கிளந்தான், திரங்கானு, ஆகிய மாநிலங்களிலுள்ள பள்ளிகள் அக்டோபர் 19 மற்றும் அக்டோபர் 21ஆம் தேதிகளில் கூடுதல் விடுமுறையைப் பெறுகின்றன.
மேலும், மலாக்கா, ஜோகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள பள்ளிகள் அக்டோபர் 21 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் விடுமுறை விடுக்கப்படுகின்றன.
சரவாக்கில், தீபாவளி தினமான அக்டோபர் 20 ஆம் தேதி அன்று மட்டும் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ஐந்து நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையை அனுபவிக்கவுள்ளதால், குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.