கோலாலம்பூர், அக். 7 - கட்டொழுங்கை மீறியதாகக் கூறி ஏழு பூர்வீக விளையாட்டாளர்களை இடைநீக்கம் செய்யும் கால்பந்து சங்கங்களின் அனைத்துலக சம்மேளனத்தின் (ஃபிஃபா) முழு எழுத்துப்பூர்வத் தீர்ப்பை மலேசியா கால்பந்து சங்கம் (எஃப்.ஏ.எம்.) பெற்றுள்ளது.
இதன் தொடர்பில் முறையீடு செய்வதற்கு தேவையான முழு ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதால் முறையான சட்ட வழிகளில் அதிகாரப்பூர்வ மேல் முறையீட்டை தாங்கள் செய்யவுள்ளதாக எஃப்.ஏ.எம். கூறியது.
விளையாட்டாளர்கள் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தனர் அல்லது தகுதி விதிகளை வேண்டுமென்றே மீற முயன்றனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தை பிரத்தியேகமாகக் கவனத்தில் கொள்வது உள்ளிட்ட முடிவுகளை சங்கம் எடுத்துள்ளது.
ஃபிஃபா கூறுவது போல் அந்த ஆவணங்கள் போலியானவை என்ற கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதில் எஃப்.ஏ.எம். உறுதியாக உள்ளது. அனைத்து ஆவணங்களும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி எஃப்.ஏ.எம்.மினால் தயாரிக்கப்பட்டு முழுமையாக சரி பார்க்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன என்று அச்சங்கம் குறிப்பிட்டது.
எல்லா தருணங்களிலும் விளையாட்டாளர்கள் நல்லெண்ணத்துடன் செய்ல்பட்டதோடு எஃப்.ஏ.எம்.மினால் நிர்வகிக்கப்படும் சரிபார்ப்பு மற்றும் பதிவு நடைமுறைகளை முழுமையாக சார்ந்திருந்தனர் என்று அறிக்கை ஒன்றில் சங்கம் கூறியது.
மலேசிய கால்பந்து விளையாட்டுத் துறையின் நலனையும் அதன் விளையாட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு அனைத்து நடைமுறைகளும் விதிமுறைகளும் வெளிப்படையாகவும் விதிகளுக்கேற்பவும் அமல்படுத்தப்படுவதை தாங்கள் உறுதி செய்வது வருவதாக எஃப்.ஏ.எம். குறிப்பிட்டது.
இந்த வழக்கை எதிர்த்து வாதாடுவதற்கு தேவையான அனைத்து சட்ட வழிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். இந்த வழக்கு மலேசிய அரசின் கடப்பிதழ் வழங்குதல் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.