ஷா ஆலம், அக் 7: வணிக நிதி உதவி, ஹலால் சான்றிதழ் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கும் PLATS தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்டத்திற்கான (U-PLATS) விண்ணப்ப நாள் அக்டோபர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூன்று முக்கிய கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என ஹிஜ்ரா சிலாங்கூர் அறக்கட்டளை (Hijrah Selangor) தெரிவித்துள்ளது. அவை U-PLATS Expand, U-PLATS Halal மற்றும் U-PLATS Digital ஆகும்.
U-PLATS Expand என்பது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் முன்-மல்டிபிராஞ்சைஸ் மற்றும் பிராஞ்சைஸ் மாடல்களில் நிதி உதவியுடன், தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்களுக்கு RM5,000 மானியமாக வழங்குகிறது. இதன் மூலம், சிறு தொழில்கள் விரிவடைய தேவையான ஆதரவுகளை பெற முடியும்.
அதே நேரத்தில், ஹலால் சான்றிதழைப் பெற தேவையான முழுமையான வழிகாட்டலையும், ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் MYeHALAL விண்ணப்ப செயல்முறைகளை U-PLATS Halal உள்ளடக்கியது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்கள் RM10,000 மதிப்புள்ள மானியத்தைப் பெறுவார்கள்.
இந்த இரண்டு திட்டங்களிலும் பங்கேற்பதற்கான முக்கிய நிபந்தனையாக, விண்ணப்பதாரர்கள் U-PLATS Digital சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். U-PLATS Digital என்பது சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து சிறு, குறு வணிகர்களுக்கும் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் இ-காமர்ஸ் பயிற்சிகளை வழங்குகிறது.
இதில் Google My Business, TikTok போன்ற தளங்களை எவ்வாறு பயன்படுத்துவது, மேலும் தானியங்கி நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தி வணிக வளர்ச்சியை மேற்கொள்வது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
U-PLATS Digitalஇல் ஆண்டுக்கணக்கில் குறைந்தபட்சம் RM24,000 விற்பனை சாதனை கொண்ட பங்கேற்பாளர்கள், 3 நாட்கள் 2 இரவுகளுக்கு நடைபெறும் Boostcamp பயிற்சியில் பங்கேற்கத் தேர்வாக வாய்ப்பு பெறுவர். இதில் பங்கேற்கும் நபர்களுக்கு PLATS POS மற்றும் RM5,000 மதிப்புள்ள வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த திட்டமானது 2023-ஆம் ஆண்டு, எம்பிஐ மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. வணிகங்களை டிஜிட்டலாக நிர்வகிக்க உதவுவதற்காக, 12 உள்ளூராட்சி நிறுவனங்களின் (PBT) ஒத்துழைப்புடன் இந்த U-PLATS திட்டம் செயல்படுத்தப்படுகிறது.