ad

தலைவர்களுக்கு எதிராக நிந்தனை, அவமதிப்பு காணொளிகளை  வெளியிட்ட எழுவர் கைது

7 அக்டோபர் 2025, 1:50 AM
தலைவர்களுக்கு எதிராக நிந்தனை, அவமதிப்பு காணொளிகளை  வெளியிட்ட எழுவர் கைது

கோலாலம்பூர், அக். 7 - நாட்டின் தலைவர்களுக்கு எதிராக நிந்தனை, அவமதிப்பு, அச்சுறுத்தல் மற்றும் அவதூறு போன்ற கூறுகளைக் கொண்ட செய்திகளை சமூக ஊடகங்களில் ஒளிபரப்பியதாக சந்தேகிக்கப்படும் ஏழு நபர்களை  அரச மலேசிய போலீஸ்படை  கைது செய்துள்ளது.

டிக்டாக் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக காணொளிகளை ஒளிபரப்பியது குறித்த ஏழு புகார்கள்  தொடர்பில் கடந்த  செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 5 வரை வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்
அவர்கள் கைது செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

ஐந்து புகார்கள் மீதான விசாரணையில் @saya_alif5, @k_a_m_i_l_2905, @HonaKia53, @japajafaruddinshop மற்றும் @zollpatv என்ற பெயர்களில்  டிக்டோக் கணக்குகளைப் பயன்படுத்துபவர்கள் நாட்டுத் தலைவர்களை நிந்திக்கும்  மற்றும் அவமதிக்கும் உள்ளடக்கங்களை  கொண்ட செய்திகளை வெளியிட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

ஆறாவது வழக்கு @tokgompo என்ற டிக்டாக் கணக்கை உள்ளடக்கியது. இதில் நாட்டின் தலைவரை அவமதிக்கும் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏழாவது வழக்கு வின்சென்ட் நாயுடு என்ற முகநூல்  கணக்கு பயனர் தொடர்பானது.

அவர் சில தரப்பினரை அவமதிக்கும் அறிக்கைகளையும் சினமூட்டும் கூறுகளையும் கொண்ட பதிவுகளை வெளியிட்டார் என்று அவர்  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் 1948
நிந்தனைச் சட்டத்தின்  4(1)வது பிரிவு மற்றும் 1998 தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின்  233வது பிரிவு  ஆகியவற்றுடன் கூடுதலாக, தண்டனைச் சட்டத்தின்  505(பி), 504 மற்றும் 506 பிரிவுகளின் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகக் குமார் கூறினார்.

விசாரணைகளுக்கு உதவும் வகையில் அனைத்து சந்தேக நபர்களும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையின்போது  40 வயதுடைய சந்தேக நபர்களில் ஒருவருக்கு 19 போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் 60 வயதுடைய மற்றொரு நபர் 2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு சங்கச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே  விசாரிக்கப்பட்டுள்ளார் என குமார் சொன்னார்.

பொதுமக்களிடையே சினத்தை தூண்டுதல், நிந்தனை,  அவமதிப்பு அல்லது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில்  சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதுவோர் விஷயத்தில் காவல்துறை ஒரு போதும் சமரசப் போக்கை கடைபிடிக்காது என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.