கிள்ளான், அக் 6 – கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸை சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற ராஜேஸ்வரி பழனி, தீபாவளி வந்தாலே தனது வீட்டை மணமாக்கும் ஒரு முக்கிய பணியில் இறங்குவார். அது தான் பாரம்பரிய முறையில் “முறுக்கு” செய்வது. சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் மற்றும் பாட்டியுடன் சேர்ந்து முறுக்கு செய்யும் பழக்கம் அவருக்கு ஆழமான நினைவாக இருந்து வருகிறது.

“நான் சின்ன வயதில் பாட்டி, அப்பா, அம்மா எல்லாம் சேர்ந்து வீட்டிலே முறுக்கு செய்வாங்க. நான் பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருந்தேன். அந்த வாசனை, அந்த உற்சாகம் இன்னும் நினைவிலே இருக்கு,” என்று புன்னகையுடன் ராஜேஸ்வரி கூறுகிறார்.
இப்போது அந்தச் சிறு வயது விளையாட்டாக இருந்த அனுபவமே, அவரின் ஆர்வமான தொழிலாக மாறியுள்ளது. இன்று ராஜேஸ்வரி தன் வீட்டிலே தயாரிக்கும் முறுக்கை அக்கம் பக்கத்தினரும், பழக்கமான வாடிக்கையாளர்களும் வாங்கிச் செல்கின்றனர்.
அவர் முறுக்கு தயாரிக்கும் போது எப்போதும் பாரம்பரிய முறைகளையே பின்பற்றுகிறார் அரிசி அரைத்த மாவு, வறுத்த கடலை மாவு, வெண்ணெய், உப்பு, மற்றும் குளிர்ந்த நீர். “மில்லில் அரைத்த அரிசி மாவு தான் மொறு மொறு சுவையைத் தரும்,” என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.
ராஜேஸ்வரி தன் குழந்தைகளுக்கு, பேரக்குழந்தைகளுக்கும் முறுக்கு செய்யும் கலையைக் கற்றுத் தந்துள்ளார். “ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்னால் எல்லாம் என் வீட்டுக்கு வந்து சேருவாங்க. எங்கள் வீடே ஒரு சிறிய தொழிற்சாலை மாதிரி ஆகிடும்!
சிரிப்பு, பேச்சு, வாசனை இதுதான் எங்களுக்கு உண்மையான தீபாவளி ஆனந்தம்,” என்று அவர் பெருமையுடன் பகிர்கிறார். அவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம் சிறுவயதில் அவரது தாய் முறுக்கு மாவில் வெள்ளை எள் சேர்க்க மறந்து விட்டார். பாதியில் தந்தை கேட்டபோது தான் அவர்கள் மறந்தது தெரிய வந்தது.
“அந்த நாளிலிருந்து நான் எல்லாப் பொருட்களையும் முன்கூட்டியே தயார் பண்ணி வைப்பேன்,” என்று சிரித்தபடி கூறுகிறார்.அவர் கூறும் படி, முறுக்கு செய்வது ஒரு கலையும், பொறுமையும் சேர்ந்து வரும் படைப்பு. மாவைச் சரியான அளவில் பிசைந்து, எண்ணெய் சரியான சூட்டில் இருந்தால் தான் முறுக்கு மொறு மொறுப்பாக வரும்.
“அதுதான் கடையின் முறுக்கில் இருந்து வீட்டிலே செய்யும் முறுக்கின் வித்தியாசம். சில கடை முறுக்கு அதிக கடினமாகவும், சில அதிக எண்ணெயாக இருக்கும். ஆனா வீட்டிலே செய்வதில் அன்பு இருக்கு,” என்கிறார் ராஜேஸ்வரி.
ஒவ்வொரு தீபாவளியும் ராஜேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து எண்ணற்ற முறுக்குகளை செய்து மகிழ்கிறார்கள். அது அவர்களுக்கு உணவாக மட்டும் அல்ல, தலைமுறைகளை இணைக்கும் பாசத்தின் அடையாளமாகவும் உள்ளது.
“என் பேரக்குழந்தைகள் கூட இப்போது முறுக்கு செய்வதில் ஆர்வம் காட்டுறாங்க. நான் பாட்டியிடமிருந்து கற்றது போல, அவர்களும் என்னிடமிருந்து கற்றுக்கொள்றாங்க. அதுதான் என் பெருமை,” என்று அவர் பாசத்துடன் கூறுகிறார்.முறுக்கு மனம் பரவிய ராஜேஸ்வரி வீடு, உண்மையில் பாரம்பரியமும் குடும்ப பாசமும் கலந்து நின்ற ஒரு இனிய தீபாவளி நினைவகமாக உள்ளது.