கோலாலம்பூர், அக். 6 - பகாங், திரங்கானு, பேராக், நெகிரி செம்பிலான், சபா, சரவாக் ஆகிய மாநிலங்கள் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கனிம மற்றும் புவி அறிவியல் துறை (ஜே.எமா.ஜி.) செயலில் உள்ள பிளவு வரைபடம் மற்றும் மலேசிய நில அதிர்வு வரைபடம் மூலம் நடத்திய ஆய்வுகள், நில அதிர்வு நடவடிக்கைகளால் பாதிக்கப்படக்கூடிய பிளவு மண்டலங்களாக இந்த மாநிலங்களை அடையாளம் கண்டுள்ளன என்று இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹுவாங் தியோங் சிய் கூறினார்.
அந்த வகையில், வானிலை ஆய்வுத் துறை உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து கனிம மற்றும் புவி அறிவியல் துறையால் உருவாக்கப்பட்ட மலேசிய நில அதிர்வு அபாய வரைபடத்தை தற்போது புதுப்பித்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
அண்மைய பூகம்ப நிகழ்வுகள், செயலில் உள்ள பிளவுகள், புவியியல் பொருட்கள் மற்றும் மண் ஆய்வு கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட சமீபத்திய தரவுகளை இந்த புதுப்பிப்பு கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
சிகாமட் மற்றும் பத்து பஹாட்டில் ஏற்பட்ட பூகம்பங்கள் பூமியின் மேலோட்டத்தை நிலைப்படுத்த பண்டைய பிளவு கோடுகளுக்குள் திரட்டப்பட்ட டெக்டோனிக் ஆற்றலை வெளியிடும் இயற்கையான செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
கிழக்கு ஜோகூரில் உள்ள ஒரு பெரிய பிளவு அமைப்பான மெர்சிங் பிளவு மண்டலத்தின் விரிவாக்கத்தால் இது பாதிக்கப்பட்டது.
தற்போதைய மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சிகாமட் மற்றும் ஜோகூர் ஒட்டுமொத்தமாக ஒரு பாதுகாப்பான மண்டலத்திற்குள் உள்ளன என்று அவர் இன்று மக்களவையில் கேள்வி-பதில் நேரத்தின் போது கூறினார்.
சிகாமட் மற்றும் பத்து பஹாட்டில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நிலநடுக்கங்களுக்கான காரணத்தைக் கண்டறியவும் எதிர்காலத்தில் இதேபோன்ற அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய பிற பகுதிகளை அடையாளம் காணவும் வானிலை ஆய்வுத் துறை மற்றும் கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் ஆய்வுகள் குறித்து ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹுடா ஹாசன் எழுப்பிய கேள்விக்கு ஹுவாங் இவ்வாறு பதிலளித்தார்