ஷா ஆலம், அக். 6 - அடுத்தாண்டு கூட்டரசு அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் சட்டத் துறைத் தலைவர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் அதிகாரத்தை முழுமையாகப் பிரிக்கும் பரிந்துரையை அரசாங்கத் தாக்கல் செய்யும்.
அதிகாரப் பிரிப்பு மாதிரியை ஏற்றுக் கொள்ள கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை ஒப்புக் கொண்டதாகப் பிரதமர்
துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார்.
இதன் வழி சட்டத் துறை தலைவர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பணிகளுக்கு சமமான அந்தஸ்து கொண்ட இரு தனிநபர்கள் பொறுப்பேற்பர் என்று அவர் தெரிவித்தார்.
சட்டத் துறைத் தலைவர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதிகாரங்களைப் பிரிப்பது வெறும் சட்ட நுட்ப விஷயங்களை சார்ந்தது மட்டுமல்ல. மாறாக, நீதித் துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையுடனும் நேரடியாக தொடர்பைக் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.
ஆகவே, இவ்விவகாரத்தை அரசாங்கம் துல்லியமாகவும் விரிவான முறையிலும் உள்ளடங்கிய வகையிலும் அமல்படுத்த விரும்புகிறது என்று அவர் அசாலினா கூறினார்.
மக்களவையில் இன்று கோத்தா பாரு பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சட்டத் துறைத் தலைவர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் அதிகாரங்களைப் பிரிப்பது தொடர்பான பரிந்துரையின் மேம்பாடு குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
நம்பகத்தன்மை கோட்பாடு மற்றும் நாட்டின் சட்ட முறையில் வெளிப்படைப் போக்கு ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மடாணி அரசாங்கத்தின் சீர்திருத்த கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அதிகாரப் பிரிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.