ஷா ஆலம், அக். 6 - சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நோர் இன்று அறிவித்தார். இதன் மூலம் அம்மாநிலத்தில் 17வது தேர்தல் நடைபெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
சபா மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால் மாநில சட்டமன்றத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து கடைசியாக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அம்மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
மாநில அரசு நிர்வாக மையமான மெனாரா கினபாலுவில் சற்று முன்பு காபோங்கான் ராக்யாட் சபா (ஜி.ஆர்.எஸ்.) சட்டமன்ற பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சபா மாநில சட்டமன்றம் இன்று முதல் கலைக்கப்படுகிறது. இது 17வது சபா மாநிலத் தேர்தலுக்கு வழி வகுக்கிறது. சபா மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி யார் தங்களை வழிநடத்துவார்கள் என்பதைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கிறது என்று ஹாஜிஜி கூறினார்.
காபோங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) மற்றும் பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் மெனரா கினாபாலு என்ற அரசாங்க நிர்வாக கட்டிடத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர் என்று தி ஸ்டார் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது
6 அக்டோபர் 2025, 8:29 AM