ஷா ஆலம், அக். 6 - இஸ்ரேலிய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட குளோபல் சமூட் புளோட்டிலா மனிதாபிமான தன்னார்வலர் குழுவைச் சேர்ந்த 23 மலேசியர்கள் இன்று தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் முறையான வழியிலும் நாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து நடைமுறைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்தான்புல்லில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி அகமது அமிரி அபு பாக்கார் கூறினார்.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் உள்ளனர். அவர்கள் விரைவாக பயணத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இன்று இல்லாவிடில் நாளை (திங்கள்கிழமை) அவர்களின் பயணம் தொடங்கும் என்று பெரித்தா ஹரியானுக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.
புளோட்டிலா பாலஸ்தீன நிவாரணப் பயணத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து மலேசிய தன்னார்வலர்களும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் விரைவில் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் அழைத்து வரப்படுவர் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக கூறியிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் நெகேவ் பாலைவனத்தில் உள்ள கெட்ஸியோட் சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் எய்லாட்டிலிருந்து துருக்கிஷ் ஏர்லைன்ஸ் மூலம் இஸ்தான்புல் திரும்பினர்.
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கழிப்பறை நீரை அருந்தியதோடு தடுப்புக் காவல் உடையோடு இஸ்தான்புல் திரும்பினர்.