ஷா ஆலம், அக். 6 - பெட்ரோல் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரோன்95 பெடரோலுக்கு மானியமில்லா விலை வசூலிக்கப்பட்ட வாகனமோட்டிகள் வித்தியாசத் தொகையைத் திரும்பப் பெறலாம் என்று துணை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ புஸியா சாலே தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்த பூடி மடாணி ரோன்95 (BUDI95) திட்டம் பெரும்பாலும் சீராக நடைபெற்று வருவதாகவும் ஓரிரு இடங்களில் ஏற்பட்ட கணினி செயலிழப்புகள் விரைவாக தீர்க்கப்படுவதாகவும் அவர் கூறியதாக தி ஸ்டார் நாளேடு கூறியுள்ளது.
கணினி சிக்கல் காரணமாக வாகனமோட்டிகள் ரோன்95 பெட்ரோலுக்கு மானியமில்லாத கட்டணத்தை செலுத்தியிருந்தால் அவர்கள் ஒரு கூடுதலாகச் செலுத்திய தொகையை மீட்கக் கோரி விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 31 வரை செய்யப்பட்ட கொள்முதல்களுக்கு பணத்தைத் திரும்பப் பெறலாம்.
விண்ணப்பங்கள் அக்டோபர் 9 முதல் தொடங்கும். மேலும் பெடரோல் வாங்கியதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு 15 வேலை நாட்களுக்குள் தொகை வரவு வைக்கப்படும் என அவர் சொன்னார்.
இதனிடையே, மானிய விலை பெட்ரோல் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு வணிகத் தரப்பினரிடையே வரவேற்பு மந்தமாகவே உள்ளதாகவும் இத்திட்டத்திற்கு இதுவரை 25 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புஸியா கூறினார்.
மானியத்தைப் பெற தகுதியான வணிகத் தரப்பினர் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்து ஃப்ளீட் கார்டு விண்ணப்பத்திற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
தாமதமாகப் பதிவு செய்தவர்கள் ரசீதுகள் இருந்தால் அக்டோபர் 1 முதல் காலாவதியான மானியங்களைப் பெறலாம் என அவர் தெரிவித்தார்..