ஷா ஆலம், அக். 6 - இருதய குறைபாடு பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் நான்காம் ஆண்டு மாணவரான எம். ஹரனேஷின் மருத்துவ சிகிச்சைக்காக சிலாங்கூர் மாநில அரசு 40,000 வெள்ளியை வழங்கி உதவியுள்ளது.
மாநில அரசின் சிலாங்கூர் இருதய சிகிச்சைத் திட்டத்தின் (பி40 பிரிவு) கீழ் செல்கேர் மேனேஷ்மேண்ட் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் வாயிலாக இந்த நிதி ஹரனேஷுக்கு வழங்கப்பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் நான்காம் ஆண்டில் பயின்று வரும் இம்மாணவரின் பெற்றோர்களான முருகன் மற்றும் திருமதி கஸ்துரி பாய் ஆகியோர் பந்திங் தொகுதி வாக்காளர்களாகவும் உள்ளனர்.
அக்குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை நல்க வேண்டியது எனது தலையாய கடமையாகும் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இந்த நிதியுதவிக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்கிய சுகாதாரத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் மற்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியாருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் (ஐ.ஜே.என்.) சிறுவன் ஹரனேஷுக்கு மேற்கொள்ளப்படவிருக்கும் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் கட்டணத்தை ஈடு செய்வதில் மாநில அரசின் இந்த உதவி பெரிதும் துணை புரியும் என நம்புகிறேன்.
பின்னணியை ஆராயாமல் மக்களின் நலன் மற்றும் சுபிட்சத்தைப் பேணிக்காப்பதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இந்த மருத்துவ உதவி புலப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
மாநில அரசின் இந்த உதவியின் வாயிலாக சிறுவன் ஹரனேஷின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். இது போல் இன்னும் நிறைய பேர் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கும் மாநில அரசு நிச்சயம் இயன்ற உதவிகளை வழங்கும் என அவர் சொன்னார்.
முன்னதாக அவர், இங்குள்ள தமது அலுவலகத்தில் இன்று செல்வன் ஹரனேஷ் மருத்துவ உதவி நிதிக்கான ஒப்புதல் கடிதத்ததை அவரது பெற்றோரிடம் பாப்பாராய்டு ஒப்படைத்தார்.