வாஷிங்டன், அக். 6 - எகிப்து நாட்டில் முக்கிய மாநாடு நடைபெறவுள்ள நிலையில் காஸாவில் போர் நிறுத்தத்தை அமல் செய்வது தொடர்பில் ஹமாஸ் இயக்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கூறினார்.
கைதிகளை விடுவிப்பதற்கும் காஸாவில் போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மத்திய கிழக்கில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக வார இறுதியில் ஹமாஸ் மற்றும் உலக நாடுகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை மிகவும் நேர்மறையான பலனைத் தந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அந்த பேச்சுவார்த்தை மிக சிறப்பாகவும் விரைவாகவும் நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையின் விபரங்களை இறுதி செய்வதற்காக நுட்பக் குழுவினர் இன்று திங்கள்கிழமை எகிப்தில் மீண்டும் கூடி விவாதிக்கவுள்ளனர் என்று அவர் சொன்னார்.
முதல் கட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரம் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தும்படி நான் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அவர் தனது ட்ரூட் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.
நிலைமையை தாம் அணுக்கமாக கண்காணித்து வரப்போகிறேன். இரு மிக முக்கியமான நேரம். இல்லாவிடில் பெரிய அளவில் இரத்தக்களரி ஏற்படும் என அவர் சொன்னார்.
போர் நிறுத்தம், இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்குதல், கைதிகள் பரிமாற்றம் தொடர்பான விவகாரங்களை விவாதிப்பதற்காக காலிட் அல்- ஹய்யா தலைமையிலான பேராளர் குழு எகிப்து வந்தடைந்துள்ளதாக ஹமாஸ் நேற்று கூறியது.