சிப்பாங், அக். 6 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஷ் ஷாரிப் நேற்றிவு கோலாலம்பூர் வந்தடைந்தார்.
பிரதமர் ஷேபாஷ் மற்றும் அவரின் பேராளர் குழுவினர் பயணம் செய்த விமானம் நேற்றிவு 9.46 மணிக்கு சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா முனையம் வந்தடைந்தது.
அந்நாட்டுப் பேராளர் குழுவினரை தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் வரவேற்றார்.
விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர், கேப்டன் நோர் சைபுல்லா மாஹ்மட் முகமது தலைமையிலான அரச மலாய் இராணுவத்தின் முதலாவது படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நடத்திய மரியாதை அணிவகுப்பை பார்வையிட்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின் பதில் வருகையாக அந்நாட்டுப் பிரதமரின் இந்த வருகை அமைந்துள்ளதாக விஸ்மா புத்ரா அறிக்கை ஒன்றில் கூறியது.
பாகிஸ்தான் பிரதமருக்கு இன்று பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்படும். அதனைத் தொடர்ந்து இரு பிரதமர்களும் இரு தரப்பு உறவு குறித்து விவாதிப்பர்.
பின்னர் இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகளின் மேம்பாடு குறித்து ஆராயும் அதேவேளையில் வர்த்தகம் முதலீடு, ஹலால் தொழில்துறை, கல்வி, சுற்றுலா மற்றும் தற்காப்புத் துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியம் குறித்தும் விவாதிப்பர்.
மேலும், இரு தரப்பு நலன் சார்ந்த வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வர்.
இது தவிர. சுற்றுலா, உயர் கல்வி, ஹலால் சான்றிதழ், ஊழல் ஒழிப்பு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை ஆகியவை தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதோடு அரச தந்திர துறைகளில் பயிற்சி வழங்குவது மீதான குறிப்புகளையும் பகிர்ந்து கொள்வர்.