அலோர் ஸ்டார், அக். 6 - நேற்று முன்தினம் முதல் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இங்கு அருகிலுள்ள லங்கார் காவல் நிலையம் தற்காலிகமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளதாகக் கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
அந்த போலீஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஒருங்கிணைந்த காவல்துறை புகார் அமைப்பு (ஐ.பி.ஆர்.எஸ்.) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அருகிலுள்ள பிற காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
நேற்று முற்தினம் பெய்த கனமழை காரணமாக நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. மாலை 6.00 மணியளவில் போலீஸ் நிலையப் பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பி நிலையத்திற்குள் சுமார் 0.13 மீட்டர் ஆழம் வரை வெள்ளம் ஏற்பட்டதாக மதிப்பிடப்படுகிறது என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
அந்நிலையம் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பது, புல் மற்றும் குப்பைகளால் வடிகால்கள் அடைக்கப்பட்டுள்ளது போன்ற காரணங்களால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
நிலையத்திற்கு முன்புறம் சுத்தம் செய்யும் நடவடிக்கைக்காக நாங்கள் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையை (ஜே.பி.எஸ்.) தொடர்பு கொண்டோம் என அட்லி கூறினார்.
இதற்கிடையில், அனைத்து முக்கிய ஆவணங்களும் பொருள்களும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதால் வெள்ள சம்பவத்தில் அவை பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையத்தில் 10 காவலர் குடியிருப்புகளும் உள்ளன. கீழ்த் தளத்தில் ஐந்து குடியிருப்புகள் மட்டுமே சிறிது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆனால், அங்கு வசிப்பவர்கள் இடம் பெயரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தில் மூழ்கியிருந்த லாங்கர் காவல் நிலையத்தின் நிலையை அட்லி நேற்று ஆய்வு செய்தார்.