ஷா ஆலம், 5 அக்டோபர் -புக்கிட் காஜாங் சுங்கச்சாவடியில் கடந்த வாரம் நான்கு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலத்த காயம் அடைந்த முகமது ஹபீஸி அனுவார் இன்று காலை 11 மணிக்கு இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஷா ஆலம் கிளையில் பணிபுரிந்த முகமது ஹபீஸி, காஜாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ. சி. யூ) காலமானார் என்று பொதுப் பணித் துறை (ஜே. கே. ஆர்) பேஸ்புக்கில் அறிவித்தது.
தொழுகைக்கு பிறகு அவரது உடல் கிள்ளானில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், அதன் பிறகு அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிகிறது. இந்த செய்தியால் ஜே. கே. ஆர் மலேசியாவின் உயர்மட்ட நிர்வாகமும் மற்றும் அனைத்து ஊழியர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர்.
மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அனுதாப செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
செப்டம்பர் 27 அன்று நடந்த சம்பவத்தில், முகமது ஹபீஸி (47), அவரது நண்பர் அலிக் ஹசுவா முகமது முஸ்லால் (35) ஆகியோருடன் காஜாங் சிறைச்சாலை கட்டிடத்தில் பராமரிப்பு பணிகளை முடித்திருந்தனர். இந்த விபத்தில் லாரி மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
காலை 11 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், அமீர் ஹுசைன் அமீருல் ரிட்ஜுவான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உயிரிழந்தது.