கோலாலம்பூர், அக். 4 - இம்மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு கெராத்தாப்பி தானா மிலாயு பெர்ஹாட் நிறுவனம் (கேடிஎம்பி) பாடாங் பெசார்-கேஎல் சென்ட்ரல் வழித்தடத்தில் இரண்டு கூடுதல் இ.டி.எஸ். ரயில் சேவைகளை வழங்கவிருக்கிறது.
இந்த கூடுதல் சேவை அக்டோபர் 17 முதல் 22 வரை மேற்கொள்ளப்படும் என்று கே.டி.எம்.பி. நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
டிக்கெட் விற்பனை செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்குத் தொடங்கும். கூடுதல் ரயில்கள் தினசரி 630 இருக்கைகளை கூடுதலாக வழங்குகின்றன. இதன் மூலம் வணிக வகுப்பு உட்பட மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 3,780 ஆக உயர்ந்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் ஏற்படும் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்வதையும் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களால் ஏற்படும் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கூடுதல் சேவை வழங்கப்படுகிறது.
பாடாங் பெசார்-கேஎல் சென்ட்ரல் கூடுதல் ரயில் காலை 11.05 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு தலைநகர் வந்தடையும். கேஎல் சென்ட்ரல்- பாடாங் பெசார் பயணம் மாலை 5.00 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்றடையும் .
கேடிஎம்பி மொபைல் செயலி (KITS) அல்லது கே.டி.எம்.பி. வலைத்தளம் வழியாக வாடிக்கையாளர்கள் டிக்கெட்டுகளை வாங்கவும், பணம் செலுத்துவதை விரைவுபடுத்த KTM Wallet செயலியைப் பயன்படுத்தவும் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வாயில் கதவு மூடப்படும் என்பதால் பயணிகள் இரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் அந்த அறிக்கை நினைவூட்டியது.
தீபாவளியை முன்னிட்டு பாடாங் பெசார்-கேஎல் சென்ட்ரல் தடத்தில் இரு கூடுதல் இ.டி.எஸ். சேவைகள்
4 அக்டோபர் 2025, 11:09 AM