பட்டர்வொர்த், அக் 4- கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில் அதில் பயணம் செய்த இருவர் கருகி மாண்டனர். இத்துயரச் சம்பவம்
இன்று காலை ஜாலான் பெர்மாத்தாங் பாரு சுங்கை லோகானில் நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் தமது தரப்புக்கு காலை 7.09 மணிக்கு அழைப்பு வந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் முகமது ஷோகி ஹம்சா கூறினார்.
பட்டர்வொர்த் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து
ஏழு பேர் கொண்ட குழு ஒரு தீயணைப்பு இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் சிக்கிய புரோட்டான் சாகா பிஎல்எம் ரகக்கார் 80 விழுக்காடு தீயில் அழிந்தது. சாலை விபத்தினால் காரில் தீப்பற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். எனினும் அவர்கள் இருவரும் இன்னும் அடையாளம் காணப் படவில்லை என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்ட போது கூறினார்.
சம்பவ இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். சவப் பரிசோதனைக்காக இறந்தவர்களின்
உடல்கள் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நடவடிக்கை காலை 10.55 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது என அவர் தெரிவித்தார்.
கார் விபத்தில் சிக்கி தீப்பற்றியதில் இருவர் கருகி மாண்டனர்- பட்டர்வொர்த்தில் சம்பவம்
4 அக்டோபர் 2025, 9:30 AM