ஷா ஆலம், அக். 4 - சிலாங்கூரில் பதிவான இன்புளூவன்ஸா சம்பவங்களில் 64.7 சதவீதம் பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான கல்வி நிறுவனங்களில் அடையாளம் காணப்பட்டவை என்று பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இருப்பினும், சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகங்கள் மூலம் நிலைமையைக் கண்காணித்து களத்தில் இடர் மதிப்பீடுகளைச் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
வகுப்பு அல்லது பள்ளிகளை மூடுவது தொடர்பான உத்தரவு இடர் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மாவட்ட சுகாதார அலுவலகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில்
பள்ளிகள் அல்லது மாநில கல்வித் துறையால் மட்டுமே வெளியிட முடியும் என்று அவர் கூறினார் .
கடந்த மார்ச் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த 10வது தொற்று நோயியல் வாரம் முதல் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த 39வது நோய்த் தொற்று வாரம் வரை 88 இன்புளூயன்ஸா பரவல் இடங்கள் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு வாரமும் சராசரியாக மூன்று நோய்ப் பரவல் இடங்கள் உருவாகின்றன என்றார் அவர்.
இன்புளுயென்ஸா காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசும் சுகாதார அதிகாரிகளும் கடந்த பிப்ரவரி மாதம் இலவச நோய்த்தடுப்பு திட்டத்தைத் தொடங்கினர் என்று ஜமாலியா மேலும் கூறினார்.
60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இன்புளுவன்ஸா சம்பவங்கள் பள்ளிகளில் பதிவு
4 அக்டோபர் 2025, 9:24 AM