ஷா ஆலம், அக். 4- சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் பத்து தீகா தொகுதியைச் சேர்ந்த 450 பேருக்கு இன்று 200 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இங்குள்ள செக்சன் 18, மைடின் பேரங்காடியில் நடைபெற்ற இந்த தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கும் நிகழ்வுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷிட் தலைமை தாங்கினார்.
கடந்தாண்டு தீபாவளியின் போது பத்து தீகா தொகுதிக்கு 400 பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 450ஆக உயர்த்தபட்டுள்ளதாக டேனியல் குறிப்பிட்டார்.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக கொண்ட இந்த ஜோம் ஜோப்பிங் திட்டத்திற்கு இவ்வாண்டு 600 விண்ணப்பங்கள் கிடைத்ததாக அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் விடுபட்ட எஞ்சிய 150 பேருக்கு உதவுவதற்கான திட்டங்களை தாங்கள் மதிப்பீடு செய்து வருவதாக கூறிய அவர், உதவி நாடி தங்கள அலுவலகத்திற்கு வருவோருக்கு சிறிதளவு ரொக்கம் அல்லது பொருளுதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்துள்ளதாகச் சொன்னார்.
சம்பந்தப்பட்டவர்களின் நிலைய நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆகவே அவர்களுக்கு இயன்ற வரை உதவிகளை வழங்க முயன்று வருகிறோம் என்றார் அவர்.
தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடு வதற்குரிய வாய்ப்பினை வசதி குறைந்தவர்களும் பெற வேண்டும் எனும் உயரிய நோக்கில் மாநில அரசு இந்த இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
மாநில அரசின் இந்த உதவி சம்பந்தப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை ஓரளவு குறைக்க உதவும் அதேவேளையில் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டா டுவதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்
பத்து தீகா தொகுதி நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பை இங்குள்ள ஈபோர் தமிழ்ப்பள்ளியில் நடத்துவதறாகான ஏற்பாடுகளை தாங்கள் செய்து வருவதாகவும் டேனியல் குறிப்பிட்டார்.
இதனிடையே, பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் மைடின்
பேரங்காடியில் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்கினர். இந்த இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தின் வழி தங்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கு உதவிய மாநில அரசாங்கத்திற்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் அவர்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.