23 மலேசிய தன்னார்வலர்கள் 48 மணி நேரத்தில் இஸ்ரேலிலிருந்து வெளியே கொண்டுவரப்படுவர்
கோலாலம்பூர், அக். 4- காஸாவுக்கான குளோபல் சுமுட் புளோட்டிலா மனிதாபிமான உதவிப் பயணத்தின் போது நேற்று முனதினம் இஸ்ரேலிய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட 23 மலேசியர்களும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆஷ்டோட் நகரிலிருந்து விமானம் மூலம் வெளியேறுவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மகிழ்ச்சிகரமான செய்தி சம்பந்தப்பட்ட அந்த 23 மலேசியர்களின் குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கிய அதிபர் ரிகேப் தாயிப் எர்டோகனுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் விமானத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மலேசியர்கள் வெளியே கொண்டு வரப்படுவர். மலேசிய தன்னார்வலர்களின் விடுதலைக்காக சுமுட் புளோட்டிலா விடுதலை ஒருமைப்பாட்டு பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதோடு நாடு முழுவதும் சிறப்பு தொழுகையிலும் ஈடுபட்டனர்.
துருக்கி மற்றும் மலேசியா இடையிலான கூட்டு முயற்சியின் வாயிலாக அவர்கள் அனைவரும் அங்காரா அல்லது இஸ்தான்புல் வழியாக தாயகம் திரும்புவர் என்று சுமுட் நுசாந்தாரா நடவடிக்கை மையத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ சானி அராபி அப்துல் அலிம் அராபி கூறினார்.
பிரதமரும் துருக்கிய அதிபரும் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக தன்னார்வலர்களை ஆஷ்டோட்டிலிருந்து வெளியே கொண்டு வரும் பணி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
தங்கள் நாட்டு பிரஜைகளை இஸ்ரேலிலிருந்து வெளியே கொண்டு வரும் முதல் நாடுகளாக மலேசியாவும் துருக்கியும் விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.