ஈப்போ அக். 4- பேராக் மாநிலத்தின் லாருட், மாத்தாங், செலாமா ஆகிய மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேரை தங்க வைப்பதற்காக தைப்பிஙகில் நான்கு வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப் பட்டுள்ளன.
தாமான் காயா சமூக மண்டபம், சிம்பாங் தேசியப் பள்ளி, மாத்தாங் தேசியப் பள்ளி ஆகியவற்றில் நேற்றிரவு 8.30 மணிக்கு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு அறிக்கை ஒன்றில் கூறியது.
இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி தாமான் காயா சமூக மண்டபத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இங்குள்ள தாமான் பெங்காலான் மக்கோர், தாமான் பெங்காலான் செத்தியா, கம்போங் தெலுக் கெர்த்தாங் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.
மாத்தாங் குளுகோர் தேசியப் பள்ளியில் திறப்பட்டுள்ள துயர் துடைப்பு மையத்தில் தாமான் பெங்காலான் செத்தியாவைச் சேர்ந்த 13 குடும்பங்களை உள்ளடக்கிய 46 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாட்டாரத்தில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடைக்கலம் தருவதற்காக தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை கூறியது.