ஷா ஆலம், அக். 3 - தலைநகர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் நேற்று நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு அமைதிப் பேரணியின் போது காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு ஆடவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இருபத்துமூன்று மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் மேல் விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்ததாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணை அறிக்கை முடிக்கப்பட்டு தண்டனைச் சட்டத்தின் 186வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்படும் என்று அவர் இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் (ஐபிகே) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பொது மக்களின் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை காவல்துறையினர் மதிக்கிறார்கள். அதே சமயம், பங்கேற்பாளர்கள் சட்டம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்கி கூட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.
காஸாவில், உலகளாவிய மனிதாபிமான குளோபல் சுமுட் ஃபுளோட்டிலா (ஜி.எஸ்.எஃப்.) படகு அணியை தடுத்து நிறுத்த இஸ்ரேல் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து நடைபெறும் எந்தவொரு கூட்டமும் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய கோலாலம்பூர் காவல்துறை எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஜாலான் துன் ரசாக்கில் பேரணி பங்கேற்பாளர்கள் போக்குவரத்தைத் தடுத்த போது குழப்பம் ஏற்பட்டதாகவும் ஒரு பங்கேற்பாளர் முழங்கையால் தாக்கியதில் போலீஸ் அதிகாரியின் வாயில் காயம் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பாலஸ்தீன ஆதரவு பேரணியின் போது கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை
3 அக்டோபர் 2025, 10:17 AM