போர்ட் கிள்ளான், அக். 3 - தலைநகரில் நடைபெறவிருக்கும் 4வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது பாதுகாப்பு உயர்ந்தபட்ச அளவில் இருப்பதை உறுதி செய்ய காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அரச மலேசிய போலீஸ் படை அதிகரிக்கவுள்ளது.
இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் அந்த அனைத்துலக மாநாட்டையொட்டி நாட்டின் பாதுகாப்பு தொடர்ந்து மறு மதிப்பீடு செய்யப்படும் என்று புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் கூறினார்.
மொத்தம் 34 நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பும் அடங்குவார். பொது ஒழுங்கின் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொள்ளும் பொறுப்பு காவல் துறைக்கு குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறைக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆசியான் உச்சநிலை மாநாடு சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு குறைந்தது 10,400 காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை நாங்கள் பணியில் அமர்த்துவோம் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள பிராந்திய கடல் போலீஸ் குழு நடவடிக்கை முகாமில் இன்று நடைபெற்ற 78வது கடல் போலீஸ் தின நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு ரீதியாக இந்த மாநாடு சிறப்புடன் நடைபெறுவதை உறுதி செய்யும் கடப்பாட்டை தமது தரப்பு கொண்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நுழைவாயில்களில் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் ஆசியான் மாநாட்டின் போது 10,492 போலீஸ்காரர்களும் 3,000 குடிநுழைவுத் துறை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் முன்னதாகக் கூறியிருந்தார்.