சிடோர்ஜோ, அக். 3 - இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தில் இடிந்து விழுந்த இஸ்லாமிய சமயப் பள்ளி கட்டிடத்தின் அருகே இன்று 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள கிட்டத்தட்ட 60 மாணவர்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை சிடோர்ஜோ நகரில் உள்ள அல் கோசினி பள்ளி இடிந்து விழுந்த சம்பவத்தில் பிற்பகல் தொழுகையில் கலந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பதின்ம மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
அந்த பள்ளியின் மேல் தளத்தில் கட்டப்படும் கட்டுமானம் காரணமாக பளு தாங்காமல் அக்கட்டிடம் இடிந்து விழுந்தது.
இப்பேரிடரில் சிக்கிய மாணவர்களில் பெரும்பாலோர் 13 முதல் 19 வயதுடைய பதின்ம வயதுடையவர்களாவர். ஆம்புலன்ஸ் வாகனங்களோடு இடிபாடுகளை அகற்ற ஒரு கிரேனும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று மாலை வரை ஐந்து பேர் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்தோனேசிய பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று, சிறுவர்களின் பெயர்களைக் கூறி அழைத்தும் சென்சார்களைப் பயன்படுத்தியும் அசைவுகளைக் கண்டறிய அதிகாரிகள் முயன்றனர். கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகளில் சுரங்கப்பாதைகளைத் தோண்டிய மீட்புப் பணியாளர்கள் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளையும் கண்டுபிடிக்கவில்லை.
அல் கோசினி என்பது உள்ளூரில் உள்ள ஒரு இஸ்லாமிய உறைவிடப் பள்ளியாகும் . உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில் மொத்தம் சுமார் 42,000 பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஏழு மில்லியன் மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்தோனேசிய பள்ளி கட்டிடப் பேரிடர் - யாரும் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை
3 அக்டோபர் 2025, 8:49 AM