இஸ்தான்புல், அக், 3 - காஸா நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த ஃபுளோட்டிலா அனைத்துலக உதவிக் குழு மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய கடற்படை அக்கப்பல்களில் இருந்த 450க்கும் மேற்பட்டோரை கைது செய்ததாக அப்பயணக் குழுவின் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
மொத்தம் 42 படகுகள் இஸ்ரேலிய கடற்படையால் சட்டவிரோதமாக வழி மறிக்கப்பட்டதாக குளோபல் சுமுட் ஃபுளோட்டிலா (ஜி.எஸ்.எஃப்.) இண்ட்ஸ்டாகிராம் சமூக ஊடகம் மூலம் தெரிவித்தது.
எங்கள் பயணிகள் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் தடைகளை மீறும் போது என்ன நிகழ்கிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது.
எனினும் மெரினெட் கப்பல் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மெரினேட் கப்பல் தொடர்ந்து பயணித்து வருவதாகவும் தொழில்நுட்ப காரணங்களால் அதன் பயணம் தாமதமடைந்துள்ளதாகவும் காஸா முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவது மீதான அனைத்துலக செயல்குழு கூறியது.
மொத்தம் 47 நாடுகளைச் சேர்ந்த 450 இயக்கவாதிகள் தென் இஸ்ரேலில் உள்ள அஸ்டோட் துறைமுகத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டதை ஜி.எஸ்.எஃப். உறுதிப்படுத்தியது.
இந்த கப்பல்களில் ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மன், சுவீடன், பிரிட்டன், மலேசியா, பிரான்ஸ. உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இயக்கவாதிகள் பயணம் செய்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இயக்கவாதிகள் அஸ்டோட் துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பின்னர் ஐரோப்பாவுக்கு அனுப்பப்படுவர் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
காஸா நோக்கிச் சென்ற அந்த உதவிப் பணி அணிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர நடவடிக்கையில் 41 கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டு 400க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய பொது ஒளிரப்பு கழகம் தெரிவித்தது.