கோலாலம்பூர், அக். 3 - காஸாவுக்கான குளோபல் சுமுட் ஃபுளோட்டிலா (ஜி.எஸ்.எஃப் ) மனிதாபிமானப் பணி நிமித்தப் பயணத்தின் போது இஸ்ரேலியப் படைகளால் மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டதானது நாட்டின் தன்னார்வலர்கள் மற்றும் இயக்கவாதிகளை உடனடியாக விடுவிப்பதற்கான அரசதந்திர முயற்சிகளைத் திரட்டுவதில் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழலை மலேசியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
தனது மக்களின் நலனில் அக்கறை கொண்டவரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துருக்கி, எகிப்து மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த தனது சகாக்கள் உட்பட உலகத் தலைவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளோடு இவ்விஷயத்தில் வாஷிங்டன் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.சுமுட் நுசந்தரா திட்டப் பணியின் புரவலராக இனுக்கும் மலேசியா அமைதியாக இருக்காது என்று அன்வர் வலியுறுத்தினார்.
இயக்கவாதிகளை தடுத்து நிறுத்தியதிலும், மனிதாபிமான உதவிகள் காஸாவை சென்றடைவதைத் தடுப்பதிலும் இஸ்ரேலின் நடவடிக்கை உலகளாவிய மனிதாபிமான மணிப்புக்கூறுகளின் சரிவுக்கான தெளிவான சான்றாக விளங்குவதாக அவர் விவரித்தார்.
23 மலேசிய தன்னார்வலர்கள் இஸ்ரேலியப் படைகளால் மாலை 4.25 மணியளவில் கைது செய்யப்பட்டதை சுமுட் நுசந்தரா கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் டத்தோ சானி அரபி அப்துல் அலிம் அரபி இரவு 10 மணிக்கு உறுதிப்படுத்தினார்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதும், அவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டதை காட்சி ஆதாரங்கள் உறுதிப்படுத்தின.
மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்ட ஜி.எஸ்.எஃப். ஒற்றுமையின் அடையாளமாகவும் இஸ்ரேலிய முற்றுகையை உடைக்கும் முயற்சியாகவும் காஸாவை நோக்கிப் பயணம் செய்கிறது.
பருவநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் மற்றும் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்டாலா மண்டேலா போன்ற சர்வதேச பிரமுகர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான இப்பயணம்உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.