ஷா ஆலம், அக். 3 - கடந்த மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் போலீசார் நான்கு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை முறியடித்து சுமார் 84 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருள்களை கைப்பற்றினர்.
இந்த சோதனை நடவடிக்கைகளில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு மொத்தம் 106 கிலோ போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் கூறினார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களில் கெத்தமின் (63.3 கிலோ), எக்ஸ்டசி (27.7 கிலோ), கஞ்சா பூக்கள் (12.3 கிலோ), ஷாபு (2.5 கிலோ) ஆகியவையும் அடங்கும் எனக் கூறிய அவர், இச்சோதனையின் போது 149,540 வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின சரக்கு முனையத்தில் சரக்கு பொட்டலம் ஒன்றை இழுத்துச் சென்ற நபர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவ்வாடவரை கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் அந்த 42 ஆடவரிடமிருந்து 12,3 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த ஆடவர் குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட 16 முந்தைய குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த அந்த போதைப் பொருளின் மதிப்பு 432,000 வெள்ளி என மதிப்பிடப்படுவதாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சபாக் பெர்ணம், பாகான் சிகிஞ்சானில் கார் ஒன்றில் கைவிடப்பட்ட 26.5 கிலோ எக்ஸ்டசி மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஆடவரை கடந்த 26ஆம் தேதி வங்சா மாஜூவில் கைது செய்தனர் என்றார்.
கடந்த 24ஆம் தேதி காஜாங்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரு ஆடவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 47 கிலோ கெத்தமின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இருபத்தைந்து வயதுடைய ஐந்தாவது நபரை உலுங்காட்டில் கடந்த 26ஆம் தேதி கைது செய்து அவரிடமிருந்து 2.5 கிலோ ஷாபுவை கைப்பற்றினர் என்று அவர் சொன்னார்.